பெருமாள்

பல்லவி
பள்ளி கொண்ட பெருமான் – நமக்கு
அள்ளி அருளைத் தருவார்
– பள்ளி கொண்ட

அனுபல்லவி
துள்ளி வரும் காவேரி கரையில்
பள்ளி கொண்ட பெருமாள் – நமக்கு
அள்ளி அருளைத் தருவார்
வள்ளி முருகனின் மாமன் அவர்
பள்ளி கொண்ட பெருமாள் – நமக்கு
அள்ளி அருளைத் தருவார்

சரணம்
ஆழ்வார்கள் பாடிய அருள் அரங்கன்
பாழ்வான வாழ்வு மாற அருள் அரங்கன்
தாழ்வான நிலை மாறும் அவன் அருள் சுரந்தால்
வாழ்வான வாழ்வு வாழ பிரபந்தம் பாடுவோம்

—பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்

நாலாயிரம்

பல்லவி
நாலாயிரம் நம் சொத்து
நாலாயிரம் நம் சொத்து
– நாலாயிரம் நம் சொத்து

அனுபல்லவி
பாலாயிரம் வேண்டாம்
நாலாயிரம் போதும்
மாலாயிரம் நாமம் தரும்
நாலாயிரம் போதும்
– நாலாயிரம் நம் சொத்து

சரணம்
அன்புடன் இராமானுஜர் நமக்கு தந்த சொத்து
ஆர்வமுடன் சேவித்தால் நமக்கு இல்லை பத்து
இகபர சுகத்திற்கெல்லாம் பிரபந்தம் ஒன்றே வித்து
ஈசனவன் பாடும் நாலாயிரம் நாம் அணிகின்ற முத்து

—-பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்

விநாயகார் பாட்டு

பல்லவி
வரணும் வரணும் விநாயகா
சரணம் சரணம் விநாயகா
அருள வரணும் விநாயகா
பரம கருணை வடிவானவா

அனுபல்லவி
வந்தி பிட்டுக்கு சென்ற தந்தையின் வரபுதல்வா நீ
குந்தி வீட்டுக்கு சென்ற கண்ணனின் மனம் நிறைந்தவா
– வரணும் வரணும்

சரணம்
குழந்தைகளின் தெய்வம் நீயே
பெரியோர்களின் தெய்வம் நீயே
தேவர்களின் தெய்வம் நீயே
விஜய் மீனாட்சியின் தெய்வம் நீயே
– வரணும் வரணும்

—பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி

கண்ணன் பாட்டு

பல்லவி
எம்பிரான் கண்ணனயே என் மனம் பாடுமே
எம்குறை தீர்ப்பவனின் பதத்தையே பாடுமே
-எம்பிரான்

அனுபல்லவி
தம்பிரான் அன்பினில் கட்டுப்பட்டவன் கண்ணன்
அம்பிரான் அன்பினில் கட்டுப்பட்டன் கண்ணன்

சரணம்
அம்பரமும் தண்ணீரும் அவனது படைப்பு
அதில் ஒட்டாமல் வாழ்வது அவனது சிறப்பு
அனைத்திற்கும் ஆதாரம் அவன் அதிலேது மறுப்பு?
அவன் அருள் பாடுகிறேன் இதிலென்ன வியப்பு?
– எம்பிரான்

—பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்

கண்ணன் பாட்டு

பல்லவி
ஆலிலைமேல் பள்ளி கொண்டாய் கண்ணா கண்ணா
-நீ ஆலிலைமேல் என்மன

அனுபல்லவி
என் மனத் துளியிலே பள்ளி கொள்ள வருவாய் கண்ணா கண்ணா
மாலியாக வருவாயே என் கண்மணி கண்ணா

சரணம்
உன் கையில் புல்லாங்குழல் என் மனம் ஆகவே
உள்ஒன்றும் இல்லாமல் இருப்பது சுகமே
புள்ளின் மேல் வருவாய் என் குறை தீர்ப்பாய்
என் கருத்திலும் கண்ணிலும் நிறைந்தவன் நீ தானே
– ஆலிலைமேல்

—பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்

முருகன் பாட்டு

பல்லவி
மனமே மனமே அமைதி கொள்வாய்
மனத்துக்கினிய மருத்துவன் முருகன் உள்ளான்
-மனமே மனமே

அனுபல்லவி
தினமே தினமே அவன் புகழ் பாடு
தினகரனாய் வருவான் நம் பிழை பொறுப்பான்
– மனமே மனமே

சரணம்
முருகன் குமரன் குகன் என்று பாடு
வருவான் மயில் மேல் நம் குறை தீர்க்க
அருளும் தருவான் அன்பும் தருவான்
இருளும் களையும் ஒளியுடன் வாழ
– மனமே மனமே

–பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்

முருகன் பாட்டு

பல்லவி
கந்தனே உனை நான் அழைக்கின்றேன்
சுந்தரனே நீ உடனே வா வா வா
– அழகு

அனுபல்லவி
சந்ததமும் நான் தொழுகின்றேன் – உனை
வந்தனை செய்தே நான் வாழ்கின்றேன்
– அழகு

சரணம்
ஆனைமுகன் சோதரனே அழகு தெய்வமே
ஊனை உருக்கும் தமிழ் இசை நாயகனே
ஏனைய தெய்வங்கள் இருந்தாலும் – சுட்ட
பானைபோல் வினையை நீக்கிடும் – அப்பா
– அழகு

–பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்

தமிழ் இசைச் சங்கம் – எண்பதாம் இசைவிழா

பல்லவி
வருக வருகவே அனைவரும் வருகவே
பருக பருகவே தமிழிசை அமுதம்

அனுபல்லவி
எண்பதாம் இசைவிழா தமிழ் இசைச் சங்கத்தில்
பண்களின் ஆராய்ச்சி இராஜா அண்ணாமலை மன்றத்தில்
தமிழ் இசைச் சங்கத்தில் வருக

சரணம்
சந்தமிகு செந்தமிழ் பாடல்கள் ஆடல்கள்
பண்ணிற்கு இணையான இராகத்தின் தேடல்கள்
தன்னிகர் இல்லாத தமிழ் இசை ஓங்குக
இன்பமிகு இன்னிசை அனைவரும் பாடுக
……… வருக

–பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்

கீர்த்தனை

பல்லவி
அருணோதயம் வருகவே வருக
இருள் அது நீங்கி நல்ஒளி பரவ – அருணோதயம்

அனுபல்லவி
தருமம் பெருக நல்வாழ்வு சிறக்க
பெருமை அது பொங்க பேதமை நீங்க – அருணோதயம்

சரணம்
அரும்பணி பல செய்ய ஆத்ம பலம் உயர
ஆருயிர் அனைத்தும் அன்புடன் திகழ
இருப்பதைக் கொண்டு நிறைவுடன் வாழ – இனி
வரும் நாட்களில் அமைதியும் வளர – அருணோதயம்

–பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்

இசை ஆரம்

அன்றும் இன்றும் என்றுமுள்ளது இசை
ஆரவாரமில்லாமல் அமைதியாய் ஒரு மின்னிதழ்
இசை ஆரம் என்ற பெயர் கொண்ட இம் மின்னிதழ்
ஈசன் அருளாலும் ஆன்றோர் ஆசியாலும்
உலகெலாம் சென்று இசை ஆய்வு செய்வோரை
ஊக்குவித்து புதிய புதிய ஆராய்ச்சிகள் மலரவும்
எண்ணத்திலும் எழுத்திலும் இசை நடன சார் எழுச்சியும் எழ
ஏற்றமான பங்களிப்பு அளித்திடும் இசை ஆரம் என்பதில்
ஐயமில்லை ஐயமில்லை ஐயமேயில்லை
ஒருமருந்தாம் இவ்வுள்ளத்திற்கும் உணர்விக்குமானது இசை
ஓங்கார பரமன் வடிவான இசையை பயில்வோம்
ஔவைத்தமிழின் இசையை இசை ஆரத்தில் வாசித்து பயன் பெறுவோம்.

பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்