திருஆடிப்பூரம்

திருஆடிப்பூரம் பாடல்

பல்லவி

திருஆடிப்பூரத்தில் உலகில் வந்தாள்

திருவில்லிப்புத்தூரில் உதித்து வந்தாள

–  வாழி

அனுபல்லவி

திருப்பாவை ஆண்டாளின் வாய்வேதம்

திருப்பாவை நோன்பு அவள் கை வேதம்

– வாழி

 

சரணம்

பெரியாழ்வார் மகளாய் வளர்ந்து வந்தாள்

பெரிய உரை நமக்குச் சொல்லித் தந்தாள்

கரிய திருமாலினக்கு மாலை தந்தாள்

பெரிய திருவடி மீது பறந்து வந்தாள்

– திருஆடி

-பேரா.வே.வெ.மீனாட்சி ஜெயகுமார்

திருச்சதகம்

திருச்சதகம்

நாடகத்தால் உன் அடியார் போல்  நடித்து நான் நடுவே

வீடு அகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும் விரைகின்றேன்

ஆடகம் சீர் மணிக்குன்றே இடைஅறா அன்பு உனக்கென்

ஊடு அகத்தே நின்று உருகத் தந்தருள் எம் உடையானே

மாணிக்கவாசகர்

 

 

வான் ஆகி மண் ஆகி வளி ஆகி ஒளி ஆகி

ஊன் ஆகி உயிர் ஆகி உண்மையுமாய் இன்மையும் ஆய்

கோன் ஆகி யான் எனது என்று அவர் அவரைக் கூத்தாட்டு

வான் ஆகி நின்றாயை என்  சொல்லி வாழ்த்துவனே

மாணிக்கவாசகர்

விழிப்புணர்வு பாடல்

விழிப்புணர்வு பாடல்

கண்ணிரண்டும் காக்க வேண்டும்

கிருமி புகாமல்

பண்பாடும் வாயும் மூக்கும் காக்க வேண்டும்

கிருமி புகாமல்

பெண்கள் ஆண்கள் அனைவரும் போட வேண்டும்

முகக்  கவசம்

சண்டித்தனம் பண்ணாமல் அரசின் விதிகளை மதித்து

வாழ வேண்டும்

Prof. Dr. V.V. Meenakshi Jayakumar

திருத்தொண்டத் தொகை

திருத்தொண்டத் தொகை

பண் – கொல்லிக் கௌவாணம்

இப்பதிகம் சுந்தரர் திருவாரூர் கோயில் தேவாசிரிய மண்டபத்திலுள்ள தொண்டர்களைக் கண்டு இவர்களுக்கு நான் அடிமையாகும் வாய்ப்பை எப்போது பெறுவேன் என்று எண்ணுகையில் இறைவன் முதலடி எடுத்துக் கொடுக்க ஓதியதாகும்.

திருச்சிற்றம்பலம்

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்

திருநீல கண்டத்துக் குயவனார்க்கும் அடியேன்

இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்

இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்

வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்

விரிபொழில்சூழ்குன் றையார்விறன் மிண்டற்கு அடியேன்

அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக்கு அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே                                  1

இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தற்கு அடியேன்

ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்

கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பற்கு அடியேன்

கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்

மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்

எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்

அலைமலிந்த புனல்மங்கை ஆனாயற்கும் அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே                                  2

மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்

முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்

செம்மையே திருநாளைப் போவாற்கும் அடியேன்

திருக்குறிப்புத் தொண்டர்தம் மடியார்க்கும் அடியேன்

மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க

வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த

அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக்கு அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே                                  3

இசையும் இறைவனும்

இசையும் இறைவனும்

அன்பே சிவம் என்பது திருமூலம் வாக்கு

ஆண்டவனை அடைய பல மார்க்கம் உண்டு

இசைமூலம் இறைவனை அடைவது சிறப்பு மிக்கது

ஈசனே ஆடும் தெய்வமாக அம்பலத்தில் உள்ளார்

உலகைப்படைத்துக் காக்கும் பரமனுக்கு இசையே வடிவம்

ஊக்கத்துடன் இசை பயின்றால் ஆண்டவன் மகிழ்வான்

எங்கும் எதிலும் இசைவடிவான இறைவன் உள்ளார்

ஏற்றமான வாழ்வுப்பெற வழிவகுக்கும் இறையிசை

ஐயமே வேண்டாம் இசைபயில்வோம் நாம் இசைபயில்வோம்

ஒன்றுபட்ட உறுதியுடன் சுருதிதாள பாவத்துடன்

ஓங்கார பரமன் புகழ்பாடும் இசைபயில்வோம்

ஔவை அருளிய அகவல் தினமும்பாடி

காஞ்சிமகான் ஆசியினால் இசை பயில்வோம்.

Prof. Dr. V.V. Meenakshi Jayakumar

கல்லாடம்

கல்லாடம்

இராகம் : இந்தோளம்                              தாளம் : ஆதி

அருந்தமிழில் நூல்கள் பல்லாயிரம்

அதில் ஒன்றுதானே கல்லாடம்

அகம், புறம் குறுந்தொகை பாடியவர் வேறு

திருக்கண்ணப்பர் தேவர் திருமாறம் இயற்றியவர் வேறு

தொல்காப்பிய உரை எழுதியவர் வேறு

கல்லாடம் இயற்றிய கல்லாடர் வேறு

பல்வேறு கல்லாடர் வாழ்ந்துள்ளனர் என்று

பல்துறை அறிஞர்கள் ஆய்வாளர்கள் கூறுகின்றனரே

அகத்திணை பற்றிய நூல் இது தானே

ஜெகத்தினை வெற்றிக்கொள்ள வழி சொல்லும் நூலே

அகத்துறைக்கு ஒரு பாடலென நூறு பாடல்கள் உள்ளன கல்லாடத்தில்

இகபர சொல்தரும் கல்லாடம் தானே

காலத்தைப் பார்த்தால் ஆறுக்கு பிறகு கி.பி. ஆறுக்கு பிறகு

காரைக்கால் அம்மை குறிப்பிருப்பதாலே

காசிக்கு நிகரான மதுரை புகழ் பாடும்

கார்த்திகேயன் முருகனுடன் சிவன் பெருமை பேசும்

பல புராண கதைக் கொண்டது இந்நூல்

பண் உண்டாகும் முறை சொல்வது

பல தோற் கருவிகள் பட்டியல் இது தரும்

பகை கிளை இணை நட்பு விவரிக்கும் நூலே

அடியார்க்கு நல்லாரும் எடுத்துக் காட்டும் நூலே

அடி அமைப்பு 15 பதினைந்து முதல் அறுபத்தி ஆறே

குரலின் இனிமை பற்றி குரல் எழுப்பும் நூலே

யாழின் பெருமையினை எடுத்துக் கூறும் நூலே

நாரத் பேரியாழ், தும்புருயாழ்யுடன்

கீசக யாழ் தேவ மருத்துவயாழ்

எனப் பல யாழ் வகைகளை விவரிக்கும் நூலே

கல்லாடம் கற்றவரோடு சொல்லாடாதே

வில்போன்று சொற்கள் வரும் கல்லாடம் பயின்றால்

பல்காலம் சொல்கின்றேன் பயில்வோம் நாம் வாரீர்

கல்லாடம் பயில்வோம் நாம் சொல்லாடக் கற்போம்.

Prof. Dr. V.V. Meenakshi Jayakumar

நெடுங்குண இராமர்

நெடுங்குண இராமர்

இராகம் : வசந்தா                           தாளம் : ஆதி

பல்லவி

நெஞ்சில் சின்முத்திரை காட்டும் இராமா

தஞ்சமென்று உனை அடைந்தேன் நெடுங்குண இராமா

நெஞ்சில்

அனுபல்லவி

வஞ்சமிலா மனம் கொண்ட உறவினைத் தருவாய்

பஞ்சம் பிணி ஏதுமின்றி உலகினைக் காப்பாய்-நெஞ்சில்

நெஞ்சில்

சரணம்

அஞ்சேல் நீ என்று அடைக்கலம் தருவாய்

வஞ்சிக் கொடி செங்கமல தாயாரின் தெய்வமே

சஞ்சலமற்ற தம்பி லட்சுமணன் உடன் இருக்க

அஞ்சனை மைந்தன் இராமாயணம் படிக்க

– நெஞ்சில் சின்முத்திரை

Prof. Dr. V.V. Meenakshi Jayakumar

நாலாயிர திவ்யப் பிரபந்தம் – தாழ் சடையும்

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஸ்ரீ பேயாழ்வார் அருளிச்செய்த

மூன்றாம் திருவந்தாதி

தாழ் சடையும் நீள் முடியும், ஒண் மழுவும் சக்கரமும்,

சூழ் அரவும் பொன் நாணும் தோன்றுமால் – சூழும்

திரண்டு அருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு,

இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து.                           2344

 

       தாழ்ந்த சடையும், அழகிய மழுப்படையும், சுற்றி அணிந்துள்ள பாம்பணியும் வாய்ந்த வடிவம், நீண்ட திருமுடியும், திருவாழிப் படையும், பொன்னரைஞாணும் வாய்ந்த வடிவம் இரண்டும், அருவி பாயும் திருவேங்கடம் உடையானுக்கு ஒரு சேரப் பொருந்திப் பொலியும்.

நாலாயிர திவ்யப் பிரபந்தம் – திருக் கண்டேன்

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஸ்ரீ பேயாழ்வார் அருளிச்செய்த

மூன்றாம் திருவந்தாதி

 

திருக் கண்டேன். பொன் மேனி கண்டேன், திகழும்

அருக்கன் அணி நிறமும் கண்டேன், செருக் கிளரும்

பொன் ஆழி கண்டேன், புரி சங்கம் கைக் கண்டேன்-

என் ஆழி வண்ணன்பால், இன்று.                               2282

 

       கடல் வண்ணனிடத்தில் திருமகளைக் கண்டேன். அழகிய திருமேனியைக் கண்டேன். செங்கதிர் ஒளியையுங் கண்டேன். களத்தில் சீறிச் செயல்படும் திருவாழியையும் கண்டேன். திருக்கையில் வலம்புரிச் சங்கையும் கண்டு வந்தேன்.

 

நாலாயிர திவ்யப் பிரபந்தம் – முதல் ஆவார் மூவரே

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

பொய்கை ஆழ்வார் அருளிச் செய்த

முதல் திருவந்தாதி

முதல் ஆவார் மூவரே, அம் மூவருள்ளும்

முதல் ஆவான் மூரி நீர் வண்ணன், முதல் ஆய

நல்லான் அருள் அல்லால், நாம நீர் வையகத்துப்

பல்லார் அருளும் பழுது.                                       2096

 

       வணங்குதற்குரிய முதல்வர்களாகக் கருதப்படுபவர் சிவன், நான்முகன், திருமால். இவர்களுக்கு முதல்வன் கடல் நிறமுடைய திருமால். நமக்கு அருள் செய்யும் இப்பெருமான் அருளே அருள். உலகில் மற்றைத் தேவர்கள் அளிக்கும் அருள் பழுதேயாம்.