எங்கள் திருநாட்டில்

எங்கள் திருநாட்டில்

எடுப்பு

மலையருவி வந்து பாயும் எங்கள் திருநாடே

மடிமடியாய் பால் சுரக்கும் பசு உள்ள நாடே

தொடுப்பு

குலைகுலையாய் வாழை இருக்கும் எங்கள் திருநாடே

இடி இடியாய் முழவதிரும் எங்கள் திருநாடே

முடிப்பு

சுனைகளெல்லாம் தேன் சொரியும் சுரக்கும் எங்கள் நாடே

பனைகளெல்லாம் கள் சுரக்கும் எங்கள் திருநாடே

வினைகள் ஏதும் பழுக்காது எங்கள் திருநாடே

மனைகள் தோறும் மங்களமே எங்கள் திருநாடே

 

தோகைமயில் ஆடிடுமே எங்கள் திருநாட்டில்

வாகைமயில் கூவிடுமே எங்கள் திருநாட்டில்

ஆகையாலே அனைத்து வளம் எங்கள் திருநாட்டில்

சாகை தோறும் சந்தனமே எங்கள் திருநாட்டில்

குழலிசையும் வீணையிசையும் எங்கள் திருநாட்டில்

மழலைமொழி கேட்டிடுமே எங்கள் திருநாட்டில்

குரவையுடன் கூத்திடுவோம் எங்கள் திருநாட்டில்

அரனுடன் அரம்பை ஆடுவர் எங்கள் திருநாட்டில்

 

வீடெல்லாம் தேவாரம் எங்கள் திருநாட்டில்

நாடெல்லாம் தமிழிசையே எங்கள் திருநாட்டில்

பாடெல்லாம் பண்ணிசையே எங்கள் திருநாட்டில்

காடெல்லாம் கனி குலுங்கும் எங்கள் திருநாட்டில்

எங்கள் நாட்டின் பெருமை சொல்வேன் தங்கமே நீ கேள்

மங்களமே சூழ்ந்திருக்கும் அன்றும் இன்றும் என்றும்

அங்கயற்கண்ணி அருள் தருவாள் அன்றும் இன்றும் என்றும்

Prof. V.V. Meenakshi Jayakumar

சரஸ்வதி

சரஸ்வதி

எடுப்பு

வீணை வாசிக்கும் கலைவாணி தாயே – காலம்

வீணாக்காமல் நான் கலை பெற அருள்வாய்

தொடுப்பு

ஆணை உன்மேலே தாயே கலை தர வருவாய்

துணையாக வேண்டும் உந்தன் அருள் நிதி கொடையே

முடிப்பு

அணை போல் காத்திடுவாய் – சரஸ்வதி தாயே

கணையாழி போல் வந்து கையில் பலம் தருவாய்

சுணை என அருள் சுரந்து காப்பாய் எனையே

வீணை என் வாழ்வின் ஒரு அங்கமாக மாற – வரம் ஒன்று தருவாய்

Prof. V. V. Meenakshi Jayakumar

கண்ணன்

கண்ணன்

kannan flute

கண்ணன் கையில் குழலாவேன் – நான்

கண்ணன் கையில் குழலாவேன் – என்

எண்ணங்கள் அனைத்தையும் அவனிடம் தந்து

குழலைப் போல் நான் உள்ளொன்றும் கொள்ளேன்

 

மண்ணைத் தின்று உலகம் படைப்பான் – என்

மனதைத் தின்று உவகை கொள்வான்

பண் கொண்டு பாடும் எந்தன் குரலில்

தேனாய் வந்து இனிமை கொடுப்பான்

 

விண்ணையும் மண்ணையும் காலால் அளப்பான்

வீணையில் இசையாய் என் வசம் வருவான்

அண்டமும் பிண்டமும் அவனே என்ற

உண்மையை எனக்கு அனுதினம் உரைப்பான்

Prof. V. V. Meenakshi Jayakumar