நாலாயிர திவ்யப் பிரபந்தம் – தாழ் சடையும்

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஸ்ரீ பேயாழ்வார் அருளிச்செய்த

மூன்றாம் திருவந்தாதி

தாழ் சடையும் நீள் முடியும், ஒண் மழுவும் சக்கரமும்,

சூழ் அரவும் பொன் நாணும் தோன்றுமால் – சூழும்

திரண்டு அருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு,

இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து.                           2344

 

       தாழ்ந்த சடையும், அழகிய மழுப்படையும், சுற்றி அணிந்துள்ள பாம்பணியும் வாய்ந்த வடிவம், நீண்ட திருமுடியும், திருவாழிப் படையும், பொன்னரைஞாணும் வாய்ந்த வடிவம் இரண்டும், அருவி பாயும் திருவேங்கடம் உடையானுக்கு ஒரு சேரப் பொருந்திப் பொலியும்.

நாலாயிர திவ்யப் பிரபந்தம் – கண்ணும் கமலம்

ஸ்ரீ பேயாழ்வார் அருளிச்செய்த

மூன்றாம் திருவந்தாதி

 

கண்ணும் கமலம், கமலமே கைத்தலமும்,

மண் அளந்த பாதமும் மற்று அவையே, எண்ணில்

கருமாமுகில் வண்ணன், கார்க் கடல் நீர் வண்ணன்,

திருமாமணி வண்ணன் தேசு.                                   2290

 

       கரிய வானின் வடிவுடையவன், நீர் வண்ணன், பெரு விலையாய் எழில் ததும்பும் எம்பெருமான் அழகை நினைக்கப் புகுந்தால், திருக்கண்கள் தாமரைப்பூ, திருக்கைகளோ அத்தாமரை மலர், உலகளந்த திருவடிகளும் அந்தச் செந்தாமரையே.

நாலாயிர திவ்யப் பிரபந்தம் – திருக் கண்டேன்

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஸ்ரீ பேயாழ்வார் அருளிச்செய்த

மூன்றாம் திருவந்தாதி

 

திருக் கண்டேன். பொன் மேனி கண்டேன், திகழும்

அருக்கன் அணி நிறமும் கண்டேன், செருக் கிளரும்

பொன் ஆழி கண்டேன், புரி சங்கம் கைக் கண்டேன்-

என் ஆழி வண்ணன்பால், இன்று.                               2282

 

       கடல் வண்ணனிடத்தில் திருமகளைக் கண்டேன். அழகிய திருமேனியைக் கண்டேன். செங்கதிர் ஒளியையுங் கண்டேன். களத்தில் சீறிச் செயல்படும் திருவாழியையும் கண்டேன். திருக்கையில் வலம்புரிச் சங்கையும் கண்டு வந்தேன்.