திருத்தொண்டத் தொகை

திருத்தொண்டத் தொகை

பண் – கொல்லிக் கௌவாணம்

இப்பதிகம் சுந்தரர் திருவாரூர் கோயில் தேவாசிரிய மண்டபத்திலுள்ள தொண்டர்களைக் கண்டு இவர்களுக்கு நான் அடிமையாகும் வாய்ப்பை எப்போது பெறுவேன் என்று எண்ணுகையில் இறைவன் முதலடி எடுத்துக் கொடுக்க ஓதியதாகும்.

திருச்சிற்றம்பலம்

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்

திருநீல கண்டத்துக் குயவனார்க்கும் அடியேன்

இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்

இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்

வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்

விரிபொழில்சூழ்குன் றையார்விறன் மிண்டற்கு அடியேன்

அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக்கு அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே                                  1

இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தற்கு அடியேன்

ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்

கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பற்கு அடியேன்

கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்

மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்

எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்

அலைமலிந்த புனல்மங்கை ஆனாயற்கும் அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே                                  2

மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்

முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்

செம்மையே திருநாளைப் போவாற்கும் அடியேன்

திருக்குறிப்புத் தொண்டர்தம் மடியார்க்கும் அடியேன்

மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க

வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த

அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக்கு அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே                                  3