எங்கள் திருநாட்டில்

எங்கள் திருநாட்டில்

எடுப்பு

மலையருவி வந்து பாயும் எங்கள் திருநாடே

மடிமடியாய் பால் சுரக்கும் பசு உள்ள நாடே

தொடுப்பு

குலைகுலையாய் வாழை இருக்கும் எங்கள் திருநாடே

இடி இடியாய் முழவதிரும் எங்கள் திருநாடே

முடிப்பு

சுனைகளெல்லாம் தேன் சொரியும் சுரக்கும் எங்கள் நாடே

பனைகளெல்லாம் கள் சுரக்கும் எங்கள் திருநாடே

வினைகள் ஏதும் பழுக்காது எங்கள் திருநாடே

மனைகள் தோறும் மங்களமே எங்கள் திருநாடே

 

தோகைமயில் ஆடிடுமே எங்கள் திருநாட்டில்

வாகைமயில் கூவிடுமே எங்கள் திருநாட்டில்

ஆகையாலே அனைத்து வளம் எங்கள் திருநாட்டில்

சாகை தோறும் சந்தனமே எங்கள் திருநாட்டில்

குழலிசையும் வீணையிசையும் எங்கள் திருநாட்டில்

மழலைமொழி கேட்டிடுமே எங்கள் திருநாட்டில்

குரவையுடன் கூத்திடுவோம் எங்கள் திருநாட்டில்

அரனுடன் அரம்பை ஆடுவர் எங்கள் திருநாட்டில்

 

வீடெல்லாம் தேவாரம் எங்கள் திருநாட்டில்

நாடெல்லாம் தமிழிசையே எங்கள் திருநாட்டில்

பாடெல்லாம் பண்ணிசையே எங்கள் திருநாட்டில்

காடெல்லாம் கனி குலுங்கும் எங்கள் திருநாட்டில்

எங்கள் நாட்டின் பெருமை சொல்வேன் தங்கமே நீ கேள்

மங்களமே சூழ்ந்திருக்கும் அன்றும் இன்றும் என்றும்

அங்கயற்கண்ணி அருள் தருவாள் அன்றும் இன்றும் என்றும்

Prof. V.V. Meenakshi Jayakumar