நாலாயிர திவ்யப் பிரபந்தம் – முதல் ஆவார் மூவரே

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

பொய்கை ஆழ்வார் அருளிச் செய்த

முதல் திருவந்தாதி

முதல் ஆவார் மூவரே, அம் மூவருள்ளும்

முதல் ஆவான் மூரி நீர் வண்ணன், முதல் ஆய

நல்லான் அருள் அல்லால், நாம நீர் வையகத்துப்

பல்லார் அருளும் பழுது.                                       2096

 

       வணங்குதற்குரிய முதல்வர்களாகக் கருதப்படுபவர் சிவன், நான்முகன், திருமால். இவர்களுக்கு முதல்வன் கடல் நிறமுடைய திருமால். நமக்கு அருள் செய்யும் இப்பெருமான் அருளே அருள். உலகில் மற்றைத் தேவர்கள் அளிக்கும் அருள் பழுதேயாம்.

நாலாயிர திவ்யப் பிரபந்தம் – வாய் அவனை

பொய்கை ஆழ்வார் அருளிச் செய்த

முதல் திருவந்தாதி

வாய் அவனை அல்லது வாழ்த்தாது. கை உலகம்

தாயவனை அல்லது தாம் தொழா, பேய் முலை நஞ்சு

ஊண் ஆக உண்டான் உருவொடு பேர் அல்லால்

காணா கண், கேளா செவி.                                                   2092

 

எனது வாய் இவனை அன்றி வாழ்த்தாது. தாவி உலகளந்த திருவடிகளையன்றி என் கைகள் தொழமாட்டா. பேயின் முலையில் நஞ்சை உணவாக உண்ட இவன் திருமேனியையன்றிக் கண்கள் காணமாட்டா. இவன் பேர்களையன்றிச் செவிகள் கேட்கமாட்டா.

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

பொய்கை ஆழ்வார் அருளிச் செய்த

முதல் திருவந்தாதி

 

வையம் தகளியா, வார் கடலே நெய் ஆக,

வெய்ய கதிரோன் விளக்கு ஆக, செய்ய

சுடர் – ஆழியான் அடிக்கே சூட்டினென் சொல் – மாலை

இடர் ஆழி நீங்குகவே என்று.                                                                                2082

 

இந்த உலகமே ஓர் அகல். அதைச் சூழ்ந்த கடலே அதில் உள்ள நெய். செங்கதிரே தீச்சுடர் என ஒளி பொருந்திய ஆழியான் திருவடிகட்கு, இடர் ஆழி, தீர்கவென்று நான் பாமாலை சூட்டினேன்.