Saivam

வான்முகில் வழாது பெய்க

மலிவளம் சுரக்க மன்னன்

கோன்முறை அரசு செய்க

குறைவிலாது உயிர்கள் வாழ்க

நான்மறை அறங்கள் ஓங்க

நற்றவம் வேள்வி மல்க

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்

 

thought of the day

உலகில் பல உயிர்கள் உள்ளன.

அவை அனைத்தும் அன்பைத் தேடியே அலைகின்றன. உண்மையில் உலகில் அன்பைத் தவிர வேறு எதுவுமே இல்லை. ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் அன்பே அனைத்திற்கும் ஆதாரமாக உள்ளதை அறிய முடிகிறது. வளரும் செடி கூட சூரிய ஒளி என்கின்ற அன்பினை நாடியே வளர்கிறது குழந்தைகளும் தாயின் அன்பிற்கு கட்டுப்படுகின்றன. ஏன் விலங்குகள் கூட அன்பிற்கு கட்டுப்பட்டே நடக்கின்றன. இயற்கை அன்னையும் அன்பிற்கு கட்டுப்பட்டு தான் உள்ளாள். இவ்வாறு உலகத்தின் இயக்கத்திற்கு அடிப்படை காரணமாக இயங்குவது அன்பு. அனைத்து உயிர்களின் நாடு நரம்புகளிலும் உள்ளத்திலும் உணர்விலும் மேலோங்கி நிற்பது அன்பொன்றே ஆகும்.

ஆனால் அந்த அன்பானது நம்முடைய வளர்ப்பு முறையினாலும் எண்ணங்களினாலும் சேர்க்கையினாலும் செய்கைகளாலும் நம்முடைய மனதில் உள்ள பலவிகாரங்களின் காரணமாகவும் மும்மலங்கள் என்று சொல்லப்படும் ஆணவம் கன்மம் மாயை இவைகளின் காரணமாகவும் அந்த அன்பை தம்முடைய இயற்கைத் தன்மையை வெளிப்படுத்தும் தன்மையானது பலவித திரைகளால் மூடப்பட்டு உள்ளது. அவற்றை ஒவ்வொன்றாக விலக்கிக் கொண்டே வந்தால் கடைசியில் நம்முடைய உண்மை சுவரூபமான அன்பு மயமான நம்முடைய வாழ்க்கை நமக்குத் தெரியத் துவங்கும்.

ஒரு எண்ணத்தை ஒரு எண்ணத்தில் நின்று செயலாற்றுவது மிகவும் கடினமான ஒன்று எண்ணத்தை தோற்றுவிப்பது இயற்கையாக நிகழக்கூடியது அடுத்தடுத்த எண்ண அலைகள் உண்டாகிக் கொண்டே இருக்கின்றன அந்த எண்ண அலைகளை தடுத்து அலைகள் ஏற்படாத வண்ணம் மனதையும் சித்தத்தையும் ஒரு நிலைப்படுத்தி வைப்பது பெரிய கலை அவ்வாறு நாம் செய்தோம் என்றால் நம்முடைய மனதில் இருக்கும் இருள் நீங்கி அழுக்கு அகன்று நம்முடைய உண்மை சுவரூபமான அன்பு நிலை நமக்கு வெளிப்படும்.

அன்பே சிவம் .

மீனாட்சி ஜெயக்குமார்