நாலாயிர திவ்யப் பிரபந்தம் – திருக் கண்டேன்

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஸ்ரீ பேயாழ்வார் அருளிச்செய்த

மூன்றாம் திருவந்தாதி

 

திருக் கண்டேன். பொன் மேனி கண்டேன், திகழும்

அருக்கன் அணி நிறமும் கண்டேன், செருக் கிளரும்

பொன் ஆழி கண்டேன், புரி சங்கம் கைக் கண்டேன்-

என் ஆழி வண்ணன்பால், இன்று.                               2282

 

       கடல் வண்ணனிடத்தில் திருமகளைக் கண்டேன். அழகிய திருமேனியைக் கண்டேன். செங்கதிர் ஒளியையுங் கண்டேன். களத்தில் சீறிச் செயல்படும் திருவாழியையும் கண்டேன். திருக்கையில் வலம்புரிச் சங்கையும் கண்டு வந்தேன்.

 

நாலாயிர திவ்யப் பிரபந்தம் – முதல் ஆவார் மூவரே

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

பொய்கை ஆழ்வார் அருளிச் செய்த

முதல் திருவந்தாதி

முதல் ஆவார் மூவரே, அம் மூவருள்ளும்

முதல் ஆவான் மூரி நீர் வண்ணன், முதல் ஆய

நல்லான் அருள் அல்லால், நாம நீர் வையகத்துப்

பல்லார் அருளும் பழுது.                                       2096

 

       வணங்குதற்குரிய முதல்வர்களாகக் கருதப்படுபவர் சிவன், நான்முகன், திருமால். இவர்களுக்கு முதல்வன் கடல் நிறமுடைய திருமால். நமக்கு அருள் செய்யும் இப்பெருமான் அருளே அருள். உலகில் மற்றைத் தேவர்கள் அளிக்கும் அருள் பழுதேயாம்.

நாலாயிர திவ்யப் பிரபந்தம் – வாய் அவனை

பொய்கை ஆழ்வார் அருளிச் செய்த

முதல் திருவந்தாதி

வாய் அவனை அல்லது வாழ்த்தாது. கை உலகம்

தாயவனை அல்லது தாம் தொழா, பேய் முலை நஞ்சு

ஊண் ஆக உண்டான் உருவொடு பேர் அல்லால்

காணா கண், கேளா செவி.                                                   2092

 

எனது வாய் இவனை அன்றி வாழ்த்தாது. தாவி உலகளந்த திருவடிகளையன்றி என் கைகள் தொழமாட்டா. பேயின் முலையில் நஞ்சை உணவாக உண்ட இவன் திருமேனியையன்றிக் கண்கள் காணமாட்டா. இவன் பேர்களையன்றிச் செவிகள் கேட்கமாட்டா.

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

பொய்கை ஆழ்வார் அருளிச் செய்த

முதல் திருவந்தாதி

 

வையம் தகளியா, வார் கடலே நெய் ஆக,

வெய்ய கதிரோன் விளக்கு ஆக, செய்ய

சுடர் – ஆழியான் அடிக்கே சூட்டினென் சொல் – மாலை

இடர் ஆழி நீங்குகவே என்று.                                                                                2082

 

இந்த உலகமே ஓர் அகல். அதைச் சூழ்ந்த கடலே அதில் உள்ள நெய். செங்கதிரே தீச்சுடர் என ஒளி பொருந்திய ஆழியான் திருவடிகட்கு, இடர் ஆழி, தீர்கவென்று நான் பாமாலை சூட்டினேன்.

இசை அரசர் தண்டபாணி தேசிகர்

இசை அரசர் தண்டபாணி தேசிகர்

 

 dr. vmj photo

 

 

பேரா. முனைவர் திருமதி. வே.வெ.மீனாட்சி

         முதல்வர்,

              தமிழ் இசைக் கல்லூரி,

              சென்னை – 104.

 

      தமிழ்ப் பாடல்களைப் பாடி பரப்புவதற்கும் தமிழிசையை நாளும் வளர்ப்பதற்கும் ஓர் அடியவரை இறைவன் அனுப்பினார் என்று சொன்னால், அது நம் தண்டபாணி தேசிகர் அவர்கள் தான்.

      இந்த இசையுலகில் எத்தனையோ பேர் தம் பெயருக்கு முன்னால் இசைச் சக்கரவர்த்தி – இசை அறிஞர் – இசைப் பேரரசர் என்றெல்லாம் அடைமொழிகளைப் போட்டுக் கொண்டாலும், ஒரு உண்மையான அரசரால், ‘இசை அரசர்‘ என்று அழைக்கப் பெற்றவர்தாம் நம் இசை அரசு தண்டபாணி தேசிகர் அவர்கள்.  ஆம், செட்டி நாட்டரசர் டாக்டர் இராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் நிறுவிய தமிழிசைச் சங்கத்தில் இசை அரசராக வீற்றிருந்து அக்கொலு மண்டபத்தில் தம் தேனினும் இனிய தமிழிசையால், இசையாட்சி செய்தவர்தாம் நம் தேசிகர் அய்யா அவர்கள்.

மிகச்சிறந்த இசைப் புலமை பெற்றவர். சைவத் திருமுறைகளையும், திருவாசகம், திருவருட்பா, ஆகியவற்றையெல்லாம் தேசிகர் அவர்கள் பாடும்போது கேட்பவர் பரவசப்படுவர். அந்தத் தில்லை நடராஜப் பெருமானே நம் கண்முன்னே நின்று அருள்பாலிப்பதாகவே தோன்றும். அத்தகைய வசீகரமான  – கம்பீரமான குரல் அவருக்கு. தம்முடைய தேன் குரலால் ரசிகர்களை தம்மோடு ஐக்கியப்படுத்திக் கொண்டவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இசைக் கல்லூரியில் நீண்டகால தனிப்பெரும் முதல்வராக  வீற்றிருந்தவர். தமிழிசைச் சங்கத்தின் இசைப் பேரறிஞர் விருது பெற்றவர். தலை சிறந்த பண்பாளர் – எல்லோரிடமும் அன்பு பாராட்டும் தகைமையாளர். சிறந்த மாணவர்களை உருவாக்கிய தமிழிசை பேராசிரியர்.

      தேசிகர் பரம்பரையில் உதித்த அவருக்கு வாய்த்தது பிறவி ஞானம். தேவாரத் திருமுறைகளை அவர் மனமுருகப் பாடுகின்ற நேர்த்தியினைக் கேட்டு, தருமபுர ஆதீனம் அவரை வைத்து, திருமுறைகளைப் பாடச் செய்து அந்த நாளிலேயே இசைத் தட்டுக்களை வெளியிட்டது பெருமைக்குரிய ஒன்றாகும். ஓதுவாமூர்த்திகள் எல்லோரும் அவரைப் பார்த்து தேவாரத் திருப்பதிகங்களை முறையோடு பாடக்கற்றுக் கொண்டனர். சிறந்த நாடக நடிகராகவும் பின்னாளில் திரைப்படங்களிலும் நடித்துப் புகழ் பெற்றார்.

      இவர்குறித்து திரு. டி. கே. எஸ். கலைவாணன் அவர்கள் தன்னுடைய என்னை வளர்த்த சான்றோர் என்ற நூலில் ”சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே என்னிடம் ஓர் கலாசார அமைப்பாளர் வந்து, தங்களுக்கு ‘இசை அரசர்‘ என்று பட்டம் வழங்கப் போவதாகத் தெரிவித்தனர். உடனே நான் அதை மறுத்தேன். அவர்களிடம் விளக்கமாகக் கூறினேன். அவர்களிடம் விளக்கமாகக் கூறினேன். பட்டங்கள் தருவதற்கு முன்பாக, நன்கு ஆராய்ந்து தர வேண்டும். இந்தப் பட்டம் வேறு யாருக்காவது தரப்பட்டிருக்கிறதா? மேலும், பெறுபவரைப் பற்றி ஏதேனும் தெரியுமா? அவருடைய கலைச்சேவை என்னவென்பதை அறிந்திருக்கிறீர்களா? என்றும் அவர்களிடம் கேட்டேன். இசை அரசர் என்றால் அது தேசிகர் அய்யாதான். வேண்டுமென்றால், நானும் என்போன்ற இசைக் கலைஞர்களும் அவருடைய தர்பாரில் இளவரசனாகவோ, சேனாதிபதியாகவோ இருந்து விட்டுப் போகிறோம். அதுதான் பொருத்தம் என்று சொல்லி, இசை அரசர் அவர் என்றால், நான் அச்சபையில் இளவரசனாக வேண்டுமானால் இருக்கிறேன் என்றும் கூறினேன். அதை அவர்கள் மனமுவந்து ஏற்றுக்கொண்டு 1982 ஆம் ஆண்டில் எனக்கு ‘இன்னிசை இளவரசு‘ என்னும் பட்டத்தை வழங்கிப் பெருமைப்படுத்தினார்கள். சென்னை ரசிக ரஞ்சனி சபாவில் தமிழக முன்னாள் முதல்வர் மாண்புமிகு பக்தவத்சலம் அவர்கள் அப்பட்டத்தினை வழங்கினார். வழங்கிய அமைப்பு தமிழ்நாட்டு நல்வழி நிலையம், சென்னை. எனவே, இசையுலகைப் பொறுத்தவரையில், இசை அரசர் நம் தேசிகர் அவர்கள்தான். அந்த சிம்மாசனம் அவருக்குத்தான் வேறு யாருக்கும் இல்லை“ என கூறுகிறார்.

      அவருடைய தமிழ் உச்சரிப்பு சுத்தம், தனித்தன்மை வாய்ந்த குரல், அதில் இழைந்தோடும் கமகங்கள் – கார்வைகள், அவரே புனைந்து வர்ணமெட்டமைத்த ஏராளமான தமிழிசைப் பாடல்கள் ஆகியவை அனைத்தும் அவருக்கு ஏராளமான ரசிகர்களை ஏற்படுத்திக் கொடுத்தது.

      பிறமொழி கீர்த்தனைகளில் புலமை பெற்றிருந்தாலும், எல்லா நேரமும் அவர் அவற்றைப் பாடுவதில்லை. தமிழில் பாடும்போது கிடைக்காத இன்பம் வேறு மொழியில் பாடும்போது கிடைப்பதில்லை என்பார். அதற்காக பிற மொழிகளை அவர் பழிப்பதில்லை.

      நம் தமிழ்நாட்டில் தாய்மொழியாகிய தமிழில் பாடாமல் வேறு எந்த மொழியில் பாட வேண்டும் என்று கேட்பார். கேட்பதோடல்லாமல், தம் இசையரங்குகளில் முழுமையும் தமிழிலேயே பாடி, கச்சேரிகளை களை கட்டச் செய்வதர் நம் தேசிகர் அய்யா அவர்கள். தமிழில் மட்டும் பாடி கச்சேரியைச் சோபிக்க வைக்க முடியும் என்பதை நிரூபித்தவர் அவர்.

முழுக் கச்சேரியையும் தமிழில் மட்டுமே பாடி, மிகுந்த வரவேற்புடன் ரசிகர்களை வெற்றியுடன் திருப்திப்படுத்திக் கொண்டிருக்கிறேன். கச்சேரியினை சோபிக்கச் செய்கிறேன் என்பதைப் பெருமிதத்துடன் டி,கே.எஸ். கலைவாணன் அவர்கள் அவருடைய நூலில் கூறிக் கொள்கிறார்.

      பாடுபவர்கள் நன்றாகச் சாப்பிட வேண்டும் என்றும், அப்போதுதான் நன்றாகப் பாட முடியும் என்றும் சொல்லிவிட்டு, தம் வெற்றிலை போட்டுக்கொண்டே அவர் சிரிப்பார்.

      மேடையில் பாடும்போது எப்படி கம்பீரமாக அமர்ந்து பாட வேண்டும்? சுருதி சுத்தமாகப் பாடுவது எப்படி? கச்சேரிகளை கட்டுவதற்கு எப்படிப்பட்ட பாடல்களை தேர்வு செய்ய வேண்டும்? முதலில் எந்த ராகம் பாட வேண்டும். விருத்தம் எப்போது பாட வேண்டும்? என்பது வரை அனைத்து நுணுக்கங்களையும் மாணவர்களுக்குக் கற்றுத்தந்தார் அவர். அது மட்டுமல்லாமல், மேடையில் பாடும்போது, நாம் முகத்தை எப்படி மலர்ச்சியுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் நடித்துக் காட்டுவார். அவ்வப்போது சிரித்த முகத்துடன் பாட வேண்டும் என்பார். அழுமூஞ்சி மாதிரி முகத்தை வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் சொல்லுவார். வித்வான்கள் நன்றாக அலங்கரித்துக் கொண்டு அம்சமாக வந்து மேடையில் அமர்ந்து பாட வேண்டும் என்றும், அப்போதுதான் நம் இசையோடு, நம் தோற்றமும் ரசிகர்களுக்கு இன்பம் பயக்கும் என்று ஆர்வத்துடன் கூறுவார் என்று தனது நேரடி அனுபவத்தினை திரு. டி. கே. எஸ். கலைவாணன் அவர்கள் கூறுகிறார்.

      ‘நந்தனார்‘ திரைப்படம் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது வரலாறு. வேறு நந்தனார் படங்கள் எதுவும் இவர் நடித்த படம் அளவுக்கு எடுபடவில்லை. ‘நந்தனார்‘ வேடத்திற்கு  அய்யா அவர்களின் பொருத்தமான நிறமும் அவருடைய தோற்றமும் குறிப்பாக, அவர் பாடிய பக்திச்சுவை நிரம்பிய பாடல்களும், அவருடைய ஒப்பற்ற நடிப்பும் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக நின்றன. அவர் படத்தில் பாடியுள்ள ‘அய்யமெத்த கடினம்‘ என்ற பாடலைக் கேட்டு உருகாதார் யார்? தேசிகர் அய்யா அவர்களின் பிரதான மாணவர் அண்ணன் ப. முத்துக்குமாரசாமி அவர்கள் செய்யும் இசைத்தொண்டு மகத்தானது.

      தேசிகர் இசையமைத்த அருமையான தமிழ்ப் பாடல்கள் அனைத்தும் சுரதாளக் குறிப்புகளோடு அண்ணாமலை பல்கலைக்கழகத்தார் நூலாக வெளியிட்டிருக்கிறார்கள்.

  1. ஆனைமுகத்தோனே – தேவமனோகரி/ஆதி
  2. இசையின் எல்லையை – சுபபந்துவராளி/ஆதி
  3. அருள வேண்டும் தாளே – சாரமதி/ரூபகம்
  4. அருள்வாய் அங்கயற்கண்ணியே – தர்மவதி/கண்டசாபு
  5. பாடவேண்டும் – அம்சநாதம்/ரூபகம்
  6. கடவுள் அருளை – கீரவாணி/ரூபகம்
  7. அன்புகொண்டேன்னை – ஆரபி/மிச்ரசாபு
  8. சினமடையாதே – பகுதாரி/ஆதி
  9. யாழின் இனிமை – சுத்த தன்யாசி/ஆதி
  10. உனை வேண்டினேன் – பவப்பிரியா/ஆதி
  11. எனை நீ மறவாதே – அம்ருதவர்ஷிணி/ஆதி
  12. சிலம்போசை கேட்குதம்மா – சாரமதி/ஆதி

பிற கவிஞர்கள் பாடல்கள்

  1. வெண்ணிலாவும் வானும் போல பீம்ப்ளாஸ் ரூபகம்
  2. துன்பம் நேர்கையில் (பாரதிதாசன்) தேஷ் ஆதி
  3. அள்ளி உண்டிடலாம் வாரீர் (கு, சா. கிருஷ்ணமூர்த்தி) பந்துவராளி/ஆதி
  4. ஜகஜ்ஜனனீ (கனம் கிருஷ்ணய்யர்) ரதிபதிப்பிரியா/ஆதி
  5. தாமரை பூத்த தடாகமடி (திருச்சி தியாகராஜன்) இந்துஸ்தான் காந்தாரி/ஆதி

அவர் பாடிய நந்தனார் திரைப்படப் பாடல்கள் அனைத்தும் பிரபலம். குறிப்பாக,

  1. அய்யே மெத்த கடினம் ராகமாலிகை ஆதி
  2. இன்பக் கனா ஒன்று ராகமாலியை ஆதி
  3. மனமே உனக்கிதமாக வந்தனதாரிணி ரூபகம்

போன்ற பல பாடல்கள் இவர் மூலம் பிரபலமடைந்தன.

      திருத்தாண்டகம் பாடுவதில் ஒரு தனித்திறமை பெற்றிருந்தார். திருப்புகழில் லய விநயாசங்கள், அழகிய இசையமைப்புக்கள் சேர்த்துப் பாடிய காரணத்தால் ‘திருப்புகழ் தண்டபாணி‘ எனும் பெயர் பெற்றார். பூவனூர்க் கோவில் ஓதுவாராகப் பணியாற்றிய காரணத்தால் ‘பூவனூர்த்தம்பி‘ என்றும் அழைக்கப்பட்டார். தாமரை பூத்த தடாகமடி என்ற பாடல் மூலம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் அவர் பெயர் பரவியது.

      தேசிகருடைய இசையமைப்பில் வந்த பாடல்கள் இன்றும் பலரால் பாடப்பட்டு போற்றப்படுகின்றன. இத்தகைய சிறப்புமிக்க தேசிகர் அவர்கள் நாமம் வாழ்க வாழ்க என்று சொல்லி வாழ்த்துவோம்.

அன்னைத் தமிழ் மொழியின் இசை அரசர்

ஆன்மீக பாடல்கள் பல புனைந்தவர்

இயல் இசை நாடகத்தில் கை தேர்ந்தவர்

ஈசன் வாழ் சிதம்பரத்தில் தான் வாழ்ந்தவர்

உண்மையான மொழிப்பற்று தான் கொண்டவர்

ஊர் உலகு போற்றும் நந்தனார் இவர்

எழுதிய பாடல்கள் பல நூறு

ஏழிசை மன்னர் என்று பட்டம் கொண்டவர்

ஐங்கரன் தாய் மதுரை மீனாட்சி மேல்

ஒன்பது பாடல்கள் தான் புனைந்தவர்

ஓங்கார இசையின் நாதத்தில் கலந்தவர்

ஔடதம் அவர் குரல் என்றுமே நமக்கு

வாழ்க இசை அரசர் திருநாமம்!

வளர்க அவர் தம் புகழ்!

ஓங்குக அவர்தம் தமிழிசை இவ்வுலகெமெலாம்!

 

அருணோதயம்

கீர்த்தனை

எடுப்பு

அருணோதயம் வருகவே வருக (2)

இருள் அது நீங்கி நல் ஒளி பரவ – அருணோதயம்

தொடுப்பு

தருமம் பெருக நல்வாழ்வு சிறக்க

பெருமை அது பொங்க பேதமை நீங்க

அருணோதயம்

முடிப்பு

அரும்பணி பல செய்ய ஆத்ம பலம் உயர

ஆருயிர் அனைத்தும்  அன்புடன் திகழ

இருப்பதைக் கொண்டு நிறைவுடன் வாழ – இனி

வரும் நாட்களில் அமைதியும் வளர

அருணோதயம்

Prof. V.V. Meenakshi Jayakumar

 

 

திருப்பள்ளியெழுச்சி

திருப்பள்ளியெழுச்சி

(திருப்பெருந்துறையில் அருளியது)

திரோதன சுத்தி

(எண்சீர் விருத்தம்)

369.

அருணன்இந் திரன்திசை அணுகினன் இருள்போய்

அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்

கருணையின் சூரியன் எழஎழ நயனக்

கடிமலர் மலரமற் றண்ணல்அங் கண்ணாம்

திரள்நிரை யறுபதம் முரல்வன இவையோர்

திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே

அருன்நிதி தரவரும் ஆனந்த மலையே

அலைகட லேபள்ளி எழுந்தரு ளாயே.

திருவாசகம்

திருவாசகம்

திருச்சாழல்

(தில்லையில் அருளியது)

சிவனுடைய காருணியம்

(நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா)

257.

கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை

தாயுமிலி தந்தையிலி தான்தனியன் காணேடீ

தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினும்

காயில் உலகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ.

Thiruvaasagam

திருச்சாழல்

(தில்லையில் அருளியது)

சிவனுடைய காருணியம்

(நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா)

255.

பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்

பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ

பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டென்னை

ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ.

Thiruvaasagam

குழைத்த பத்து

(திருப்பெருந்துறையில் அருளியது)

ஆத்தும நிவேதனம்

(அறுசீர் விருத்தம்)

501.

வேண்டத் தக்க  தறிவோய்நீ

வேண்ட முழுதுந் தருவோய்நீ

வேண்டும் அயன்மாற் கரியோய்நீ

வேண்டி என்னைப் பணிகொண்டாய்

வேண்டி நீயா தருள்செய்தாய்

யானுமதுவே வேண்டின் அல்லால்

வேண்டும் பரிசொன் றுண்டென்னில்

அதுவும் உன்றன் விருப்பன்றே.